Tuesday, July 22, 2008

மா. ஆண்டோ பீட்டர் நேர்காணல்

மா. ஆண்டோ பீட்டர் நேர்காணல்
தமிழ் தகவல் தொழில்நுட்பத்தை பொருளாதார வளமாக்க வேண்டும்!
தமிழ்க்கணினி உலகில் சுமார் 17 வருட அனுபவம் உடையவர். பிரபலமான எழுத்தாளர். சென்னையில் சாஃப்ட்வியூ என்ற கணினி நிறுவனம் வாயிலாக தமிழ் எழுத்துருக்கள், மல்டிமீடியா சிடிக்கள், அனிமேஷன் பயிற்சிகள் மற்றும் தமிழ் மென்பொருள் தயாரிப்பு பணிகளை செய்து வருகிறார். சுறுசுறுப்பு மற்றும் திட்டமிடுதல் ஆற்றலால் வலிமையாக தமிழ்க்கணினி துறைக்கு பணியாற்றி வருகிறார். பாஷாஇந்தியா இணைய தளத்திற்கு அவரை நேர்காணல் செய்த போது:
தங்களுக்கு தமிழ் தகவல் தொழிற்நுட்பத் துறையில் புத்தகங்கள் படைக்க வேண்டுமென எவ்வாறு உதித்தது?
ஆண்டோ: பல பத்திரிகைகளிலும், நாளிதழ்களிலும் கணினி கட்டுரைகள் பல படைத்துள்ளேன், தொடர் கட்டுரைகள் கூட பல எழுதியுள்ளேன். பாஷா இந்தியா தமிழ்தளத்திலும் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். அச்சுமீடியா மூலமாக பாமரருக்கும் தகவல்களை அளிக்க முடியும், புரிய வைக்க முடியும், எளிமைப் படுத்த முடியும் என்பதை உணர்ந்தேன். பட்டி தொட்டியெங்கும் தகவல் தொழிற்நுட்ப செய்திகள் தேவையென்ற அவசியம் என் மனதிற்கு பட்டதால் எழுத்துப்பணியில் ஈடுபட்டேன், இதுவரை சுமார் 14 நூல்கள் தமிழில் எழுதியுள்ளேன். இவற்றில் பல நூல்கள் மறுபதிப்பு வரை படைக்கப்பட்டு புகழடைந்துள்ளது. நான் எழுதிய 'தமிழும் கணிப்பொறியும்' என்ற நூல் 2002 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நூல் விருதைப் பெற்றுள்ளது.
உங்கள் அலுவலக படைப்பில் www.tamilcinema.com என்ற புகழ்பெற்ற படைப்பின் சாதனை என்ன?
ஆண்டோ: உலகில் வெளியான முதல் தமிழ் இணைய இதழ் என்ற பெருமை தமிழ் சினிமாவிற்கு உண்டு. 1997 ஆண்டு தொடங்கப்பட்டு, இன்றுவரை இலவச டவுண்ட் தமிழ் எழுத்துரு அளிக்கப்பட்டு, முழுத்தளமும் தமிழிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் தமிழர்கள் வாழும் அனைத்து திசைகளின் மூலமாக ஒரு நாளைக்கு சுமார் 7 லட்சம் வாசகர்கள் வரை இவ்விணையத்திற்கு வருகை தருகிறார்கள்.
தமிழ் எழுத்துருக்கள் தயாரிப்பில் உங்கள் நிறுவனத்தின் பங்கு என்னென்ன?
ஆண்டோ: தமிழ் எழுத்துருக்கள் பணியில் பல ஆண்டுகளாக எங்கள் நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. தமிழில் 450 எழுத்துருக்களும், இந்தியில் 60 எழுத்துருக்களும், மலையாளத்தில் 38 எழுத்துருக்களும், தெலுங்கில் 50 எழுத்துருக்களும், கன்னடத்தில் 32 எழுத்துருக்களும் எங்கள் நிறுவனம் தயாரித்துள்ளது. எவரெனும் பிரத்யோகமாக எழுத்துரு தேவையென அணுகினாலும் தயாரித்து அளிக்கிறோம். இவைத்தவிர பார்டர்ஸ், பிரேம்கள், கிளிப்ஆர்ட்ஸ், சிம்பல்ஸ் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறோம். ஆகையால் தான் அச்சகம் மற்றும் பதிப்பகத்துறையில் எங்கள் நிறுவனம் மேலோங்கியுள்ளது.
தமிழ் மல்டிமீடியா சிடிகளின் வணிகம் உலக அரங்கில் எந்த அளவில் உள்ளது?
ஆண்டோ: பல புதிய மல்டிமீடியா நிறுவனங்களும், கணினி நிறுவனங்களும் கூட மொழி சார்ந்த மல்டிமீடியா சிடிகளை வெளியிடத் துவங்கியுள்ளனர். இதுசார்ந்த துறை காலியாகவேவுள்ளதென கூறலாம். தமிழில் திருக்குறள், ஆத்திசூடி, தமிழ்ப்பெயர்கள். தட்டச்சு துணைவன், புதிய ஆத்திச்சூடி, குழந்தைப்பாடல்கள் மற்றும் கதைகள், ஆகிய சிடிக்களை வெளிட்டுள்ளோம். தரமான அனிமேஷனுடன் தமிழில் சிடிக்களை எங்கள் நிறுவனம் வெளியிடுவதால் நன்மதிப்பு பெருகியுள்ளது. இவை தவிர தமிழ் மொழியை கற்பிப்பதற்காக தமிழ் கற்போம் மற்றும் தமிழ் இலக்கணம் ஆகிய சிடிக்களையும் வெளியுட்டுள்ளோம். மேலும் பல தமிழ் அனிமேஷன் சிடிக்கள் எங்கள் நிறுவனத்திலிருந்து வெளிவரவுள்ளது. தமிழ் மல்டிமீடியா சிடிக்கள் கணினி வணிக மையங்களின்றி பேன்ஸி ஸ்டோர்ஸ், முதல் புத்தகக்கடை வரை அனைத்து இடங்களிலும் அதனுடைய மார்க்கெட் பரவியுள்ளது.
வணிகத்திற்கு அப்பாற்பட்டு தமிழ்க்கணினி சேவையில் தங்களை எவ்வாறு ஈடுபடுத்த முடிகிறது?
ஆண்டோ: தகவல் தொழிற்நுட்பத்துறையை கிராமம் வரை கொண்டு செல்ல வேண்டிய என்னுடைய கனவு. என்னுடைய ஆர்வங்கள் மற்றும் அலுவலகப்பணிகள் அனைத்தும் தமிழ் சார்ந்தே இருப்பது என்னுடைய கனவினை வண்ணமயமாக மாற்றுகிறது. கணித்தமிழ்ச்சங்கம், தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் உத்தமம் ஆகிய தமிழ்க் கணினி இயக்கங்களில் என்னை ஈடுபடுத்தியுள்ளேன். நான் பங்கெற்கும் பிற அமைப்புகளிலும் தமிழ்க்கணினிக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்துகிறேன். மொத்தத்தில் என் தாய்மொழி தமிழ் பொருளாதார ரீதியாக வெற்றியடைய பலவகைகளில் முயற்சி எடுத்து வருகிறேன்.

No comments: