Tuesday, July 22, 2008

இணையத் தமிழின் எதிர்காலம்

ஓரிரு எண்ணங்கள் இணையத் தமிழின் எதிர்காலம் இணையவலையில் முதன் முதல் 1996-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நுழைந்த இந்திய மொழி தமிழ் என்று சொல்கிறார்கள், உண்மையாக இருக்கலாம். இதற்கு முக்கியமான காரணம் வெளிநாட்டுத் தமிழர்கள், 1986-லேயே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். மெல்ல மெல்ல பின் தள்ளிக் கொண்டு இன்டர்நெட் கண்டுபிடிப்பதற்கு முன்பிருந்தே தமிழ், இணையத்தில் பயன்பட்டது என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை. ஆனால் இதில் முக்கியமானது இணையத்தில் மிக முன்னேற்றமடைந்திருந்த சிங்கப்பூர், கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் தாய்மொழி ஆர்வமும், அதேபோல் அமெரிக்காவில் பிழைக்கச் சென்ற மென்பொருளாளர்களின் தமிழ் ஆர்வமும்தான். அவர்கள் அங்கே போனதும் தமிழுக்கு உருப்படியாக எதாவது செய்தே ஆகவேண்டும் அதைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்று தீர்மானித்து, சும்மா இருந்த சங்கை ஓய்வு நேரத்தில் எல்லோரும் ஊதி தமிழை இணையத்தில் உள்ளிட்டு உன்னதப்படுத்திக் கொண்டிருந்தார்கள். முதலில் தமிழே பேசாத தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் மென்பொருள்களை எழுதினார்கள். இந்தப் பணியைச் சீரமைக்க எந்த இயக்கமும் இல்லாததால் பெரும்பாலும் இவர்கள் செய்ததெல்லாம் விரயமாகவே போயிற்று என்று சொல்லலாம். இதில் முன்னோடிகள் என்று சொல்ல வேண்டியவர்கள் கனடாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசனின் ஆதமி, சிங்கப்பூர் நா. கோவிந்தசுவாமி, மலேசியாவின் முத்தெழிலன், சுவிஸ்நாட்டைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் ஆவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பென்லங்வேஜ் செண்டரின் டாக்டர் ஷிப்மன், டாக்டர் ரங்கநாதன் - இவர்களின் பணியும் சிறப்பானது. தமிழ் கற்றுத் தரும் தளங்களில் பென் சிறந்தது. தமிழின் உள் குறியீடுகளிலும் அதன் விசைப்பலகையிலும் தரக்கட்டுப்பாடு இல்லாததால் அவரவர் தமதமது அறிவறி வகை தமிழைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். தமிழைக் காப்பாற்ற இத்தனை வழிகளா என்று வியப்படையும் அளவுக்கு அத்தனை ஆர்வலர்களும் மென்பொருளாளர்களும் ஆளாளுக்கு இஷ்டத்துக்கு இந்தக் காரியத்தைச் செய்து, இந்தப் பணி அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் பிடிவாதங்களும் அதிகரிக்க 'நான் காப்பாற்றினதுதான் சரியான காப்பாற்றல், நீ காப்பாற்றினது தப்பு' என்கிற தொன்றுதொட்ட தமிழ் ஒற்றுமையைக் காட்டினதில் இந்திய மொழிகளிலேயே அதிக அளவில் உள் குறியீடுகள் தமிழில்தான் உள்ளது என்கிற சந்தேகத்துக்குரிய பெருமையையும் நம் மொழி பெற்றது. மற்ற இந்திய மொழிகள் இதற்கெல்லாம் நேர விரயம் செய்யாமல் மைய அரசின் அஸ்கி குறியீட்டை நேரடியாக ஏற்றுக்கொண்டார்கள். தமிழில் அவ்வளவு சுலபத்தில் அது நடக்கவில்லை. இன்று ஆல்ட்டாவிஸ்டாவில் தமிழ் என்று உள்ளிட்டு தேடினால் 4,82,918 பொருத்தங்கள் தென்படும். இவைகளில் எத்தனை வெறும் பக்கங்களாக இல்லாமல் முழு இணையத் தளங்கள் என்றால் 310 தேறுகிறது. அவைகளில் இணைய இதழ்கள் 23, தமிழ் கற்றுக்கொடுக்கும் தளங்கள் 6, திருக்குறளுக்கு 5, மின் நூலகங்கள் 4, ஆய்வுகள் 3, அகராதிகள் 5, அரசியல் கட்சிகள் 5, ஊர்களுக்கான இணைய தளங்கள் 42, இணைய வானொலிகள் 12, இணைய மாநாடுகள் 3, இணையத் தொகுப்பாளர்கள் 10, தமிழக அரசு 18, இலக்கிய ஆராய்ச்சி 18, கர்நாடக இசை, தமிழிசை, பரதநாட்டியம் 22, திரைப்படப் பாடல்கள் திரை உலகு சார்ந்த தளங்கள் 106. மற்றவை எல்லாம் தனிப்பட்ட தமிழ் ஆர்வலர்களின் சோகையான அரை மனதான முயற்சிகள். இவைகளை ஆராய்வது ஒரு நல்ல பொழுதுபோக்கு. தமிழக அரசு கொஞ்சம் தாமதமாக விழித்துக் கொண்டு குறியீடுகளையும் விசைப்பலகையையும் தர நிர்ணயம் செய்யத் தீர்மானித்தது. மூன்று தமிழ் இணைய மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட, மிகுந்த விவாதங்களுக்குப் பிறகு TAM, TAB என்ற இரண்டு குறியீடுகளையும் இரண்டு விசைப்பலகை ஒதுக்கீடுகளையும் தர நிர்ணயம் செய்தார்கள். இதையும் வெளிநாட்டுத் தமிழர்கள் தயக்கத்துடன் ஒப்புக்கொள்ளலாமா, இல்லை தாங்கள் கண்டுபிடித்த டிஸ்கிதான், மயிலை போன்றவைதான் உசத்தியா என்று குழப்படியில் இருக்கிறார்கள். பெரும்பாலான தமிழர்கள் அதிக அளவில் பயன்படுத்த இரண்டு குறியீடுகளையும் இரண்டு விசைப்பலகை ஒதுக்கீடுகளையும் இறுகிய முகத்துடன் ஒப்புக் கொண்¢டிருக்கிறார்கள். இந்த நிலையையாவது அடைவதற்கு இந்த மேடையில் வீற்றிருக்கும் டாக்டர் ஆனந்தகிருஷ்ணனின் பங்கேற்பு கணிசமானது. இதற்குள் டெக்னாலஜி முன்னேற்றமடைந்து இந்தச் சண்டைகள் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. டைனமிக் ஃபான்ட்ஸ் என்னும் வசதி வந்தது. தமிழ் இணையத் தளத்தைத் திறந்த உடன் தமிழைப் பார்க்க முடிகிறது. ஆரம்ப கட்டங்களில் தமிழ் எழுத்துகளுக்கான s ஐ முதலில் அந்தந்த இணையத் தளத்திலிருந்து ஒரு முறை இறக்குமதி செய்து வைத்துக் கொள்ளத் தேவையிருந்தது. இப்போது தேவை நீங்கிவிட்டது. இணையத்தில் தமிழைப் பார்க்க, படிக்க இறக்குமதி தேவையில்லை. இணையத்தில் தமிழை உள்ளிடத்தான் தர ஒற்றுமை வேண்டும் என்கிற நிலைக்கு வந்திருக்கிறது. இது ஒரு முன்னேற்றம்தான். தமிழ் இனி தங்கு தடையின்றி எந்த வடிவத்தில் கிடைத்தாலும் நம் வடிவத்துக்கு மாற்றிக் கொள்ளும் மென்பொருள் வசதியும் ஏற்பட்டிருக்கிறது. யூனிகோடு என்னும் சர்வதேச குறியீட்டுத் தரம் வந்ததும் ஓரளவுக்கு ஒருங்கமைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை டிஸ்கி, அஞ்சல், பதமி, மயிலை, இ.ன்ஸ்க்ரிப்ட் என்று அங்கங்கே வட்டார வழக்குகளாக இணையத்தில் இருந்தாலும் தமிழக அரசின் டாம் (TAM) டாப்தான் (TAB) பெரும்பான்மை பயனீட்டில் வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையை நான் குறை கூறவில்லை. டெக்னாலஜி மொழி உணர்ச்சியற்றது. உங்களுக்கு ஆறு தமிழ் வேண்டுமா ஆறும் தருகிறேன் என்று சொல்லும். உங்கள் பொன்னான நேரத்தை விரயம் செய்யுங்கள், பரவாயில்லை என்றால். ஆரம்பத்தில் எல்லா தமிழ்ப் பத்திரிகைகளும் தங்கள் பத்திரிகையில் ஏற்கெனவே உள்ளிட்ட சங்கதிகளை இணையத்தில் காட்டிட, அவரவர் இஷ்டத்துக்கு ஃபாண்ட் அமைத்தார்கள். அந்த நிலை மாறிவிட்டது. இணையத்தில் hit rate எண்ணிக்கைகளைக் கண்டு புளகாங்கிதம் அடைந்து, இதில் வியாபாரம் நடத்திக் காசு கொழிக்கலாம் என்ற ஆசையில் டாட் காம் கம்பெனிகளின் ஆரம்ப உற்சாகத்தால் எல்லோரும் ஈர்க்கப்பட்டு பெரிதாக முதல¦டு செய்து, விளம்பரம் பிரமாதமாக செய்து இணைய இதழ்களும் தளங்களும் துவங்கி, பளபளவென்று ஏசி அலுவலகங்கள் அமைத்து, இதுவரை தமிழ் எழுத்தாளர்கள் எதிர்பார்த்திராத அபத்தமான சம்பளங்கள் எல்லாம் கொடுத்து தடாலடியாக புறப்பட்டார்கள். சுமார் நூறு இணைய தளங்களும் பத்திரிகைகளும் இப்படிப் பிறந்தன. நாளடைவில் இதில் சில்லரை இல்லை, தமிழர்கள் இலவசமாக கொடுத்தால்தான் எதையும் படிப்பார்கள், காசு கேட்டால் கழன்று கொள்¢வார்கள் என்கிற யதார்த்தம் புலப்பட பல தளங்கள் தங்கள் கடை பரப்பலை நிறுத்திக் கொண்டுவிட இன்றைக்கு தமிழ் இணைய இதழ்கள் 23 இருப்பதாகத் தெரிகிறது. அவைகளில் தீவிரமாக இயங்குவது பத்துப் பதினைந்து. இவை நான்கு வகைப்படுகின்றன. 1. அம்பலம்போல இணையத்திற்கென்றே தனிப்பட்டு நடத்தப்படும் மின் இதழ்கள். ஆறாம்திணை, இன்தாம், sify.com போன்றவை உதாரணங்கள். 2. தினபூமி, தினமணி, விகடன், குமுதம் போன்ற சம்பிரதாய பத்திரிகைகளின் இணைய அவதாரங்கள். இவைகள் பெரும்பாலும் அந்த வார, தினப் பத்திரிகைகளில் வருவதை அப்படியே திருப்புகிறார்கள். உள்ளடக்கத்துக்கு பஞ்சமில்லாததால் ஏற்கெனவே உள்ளிட்டதை இணையத்தில் மீண்டும் அபரிமிதமாகத் தருவதில், அவர்களுக்கு சிரமம் இருப்பதில்லை. இது ஓசியில் கிடைப்பதால் வெளிநாட்டுத் தமிழர்கள் அதிகம் பேர் பார்ப்பதால் இவைகளுக்கு hit rate மிக அதிகமாக இருக்கிறது. இது ஒரு மாயை. இவைகளுக்கு காசு கேட்டால் இந்த hit rate சரேல் என்று குறைந்து விடுகிறது. மூன்றாவது வகை niche pages என்று சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட இயலில் மட்டும் தகவல்களைத் தரும் தளங்கள். வேலைவாய்ப்பு, தமிழ்இசை, நூலகம், மருத்துவம், தமிழ்ப் பெயர்கள், ஜோசியம், தேடியந்திரம், பொங்கல் வாழ்த்துகள் - இப்படியான தளங்கள். களஞ்சியம் போன்ற நூலகங்கள், இசை, குழந்தை வளர்ப்பு, கல்யாணம், சமையல் குறிப்பு போன்ற ஒரு தனிப்பட்ட இணையத் தளங்கள். தமிழ்ச் சமுதாயத்தின், தமிழனின் தின வாழ்வையும் மன வாழ்வையும் எந்த அளவுக்கு சினிமா ஆக்கிரமிக்கிறதோ அதே அளவில் இணையத்திலும் சினிமாதான் பிரதானமாக இருக்கிறது. அத்தனை நடிகர்களின் வாழ்க்கை வரலாறுகளும் அவர்களுக்கு நடைபெற்ற பைல்ஸ் ஆப்ரேஷன் வரை விவரமாக கொடுக்கப்படுகின்றன. ஏ.ஆர். ரஹ்மானின் அத்தனை மெட்டுகளையும் காப்பிரைட் கவலையின்றி கேட்கலாம். இவைகளையெல்லாம் கவனிக்கும்போது பொதுவான ஒரு வடிவம் வெளிப்படுகிறது. தமிழ் இணைய பத்திரிகைகளும் சம்பிரதாயமான தமிழ்ப் பத்திரிகைகளின் அமைப்புடன் கொஞ்சம் ஆடியோ விடியோ கலந்து இருக்கின்றன. இணையத்தின் சாத்தியங்கள் அனைத்தையும் பயன்படுத்த இதுவரை தவறிவிட்டதாகத்தான் தெரிகிறது. இணையத்தின் சாத்தியங்கள் என்ன என்ன? இணையத்தில் உடனடியாக வாசகருடன் பேச முடியும். அவர் எழுதுவதை திருத்த முடியும். அனுப்பியதை அங்கீகரிக்கவோ நிராகரிக்கவோ முடியும். படம் வரைவது, கவிதை, கட்டுரை, பேச்சு, பாட்டு - அவருடைய எந்தத் திறமையையும் இணையம் மூலம் கவனிக்க முடியும். இதன் ஆரம்ப நிலையாக நான் சனிக்கிழமை அம்பலத்தில் நடத்தும் சாட் இந்தப் புதிய சாத்தியக்கூறை கோடி காட்டுகிறது. ஆஸ்திரேலியாவிலிருந்தோ ஐதராபாதிலிருந்தோ ஒருவர் அனுப்பும் ஹைக்கூவை நான் இங்கிருந்து கவனித்து அதைப் பற்றி என் கருத்தை உடனடியாக சொல்ல முடிகிறது. இது இணைய இதழின் அடுத்தக் கட்ட சாத்தியம். அவர்கள் வரையும் படங்களை உடனுக்குடன் பார்க்க முடியும். திருத்தி வரையச் சொல்லலாம். அல்லது அவர்கள் பாடினாலும் கேட்கலாம். வாசக - ஆசிரியக் கருத்துப் பரிமாற்றத்தின் பரிமாணங்கள் விரிவாகின்றன. ஒரு கடிதமோ, கேள்வி - பதிலோ தபாலில் அனுப்பி அது ஆசிரியர் மேசைக்குப்போய் அவர் அதை அங்கீகரித்து - அதெல்லாம் இல்லாமல் உடனடியாக பதினைந்து நிமிஷத்தில் ஒரு படைப்பை உலகுக்கு தெரிவிக்க முடியும். இந்தச் சாத்தியத்தின் முழு பாதிப்பை நினைக்கவே வசீகரமாக இருக்கிறது. பத்திரிகையில் வாரம்தோறும் தினந்தோறும் இல்லாமல் கணந்தோறும் வியப்புகள் மாறலாம். 'IN THE FUTURE EVERY ONE WILL BE FAMOUS FOR FIFTEEN MINUTES' என்று ஆண்டி வார்ஹால் சொன்னதை இணைய இதழ்கள் மெய்ப்பிக்கப் போகின்றன. இதன் நன்மைகள் ஏராளம். எனினும் சில தீமைகளும் உள்ளன. கவிதை, கதை படைப்புகளின் தற்காலிகத் தன்மை அதிகரிக்கும். ஆனால் அதே சமயத்தில் அவைகளின் சாசுவதமும் இணையத்தில் அதிகரிக்கும். உதாரணமாக இதுவரை அம்பலத்தில் இரண்டு ஆண்டுகளாக உள்ளிட்ட அத்தனை விஷயங்களும் ARCHIVING என்று இந்தத் தளத்தின் நினைவகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதைக் கேள்விகள் கேட்டு ஆராய்ச்சிக்கோ அல்லது சமயம் கிடைக்கும்போது படிப்பதற்கோ கொண்டு வர இயலுகிறது. இதனால் அவசர உலகம், நிதான உலகம் இரண்டிற்கும் இணையம் ஈடு கொடுக்கிறது. தமிழின் இரண்டாயிரம் ஆண்டு இலக்கியங்கள் அனைத்தையும் இதுவரை வந்துள்ள ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு எழுத்தையும் உள்ளிட ஒரு சிறிய அறை நிறைந்த வட்டுகள் போதும் எனும்போது பிரமிப்பாக இருக்கிறது. தமிழில் இதுவரை எழுதியது இனி எழுதுவது எதுவும் சாகாது. உலகில் எங்காவது ஓர் இணையத் தளத்தில் எதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும். இதனால் உலகளாவிய ஒரு ராட்சச தேடியந்திர மென்பொருள் அமைத்து அதில், 'தமிழ் உலகில் எங்கிருந்தாலும் கொண்டு வா' என்கிற ஒரு கட்டளை கொடுக்கும் அளவுக்கு டெக்னாலஜி முன்னேறியிருக்கிறது. எதிர்காலத்தில் மனத்தில் உள்ள எண்ணங்களை எதாவது ஒரு வடிவத்தில் வெளிப்படுத்தினால் அது சாசுவதம் பெற்றுவிடும். அதை நீக்கவே முடியாது என்று தோன்றுகிறது. எனவே இனி ரகசியம் என்று கேளா கானங்களாக, எழுதாத கவிதைகளாக, வரையாத சித்திரங்களாகத்தான் இருக்கும். மற்றவை எல்லாமே உலகுக்குச் சொந்தமாகிவிடும். இதனால் ஏற்படும் அந்தரங்க இழப்பை இப்போது யாரும் எண்ணிப் பார்க்க நேரமில்லை. 'எதிர்காலத்தின் ஒரே ஒரு சிறப்பு அது ஒவ்வொரு நாளாக வருவதுதான்' என்று Acheson சொன்னார், நல்ல வேளை. (அம்பலம் 2-ம் ஆண்டு விழா மற்றும் மலர் வெளியீட்டு விழாவில் எழுதி வழங்கிய கட்டுரை)

w பதில்கள் w புறநானூறு

No comments: